நெல்லையில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
நெல்லையில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
நெல்லை:
நெல்லையில் மோசமான சாலையில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சாலைகளை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக நெல்லை புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் பூங்காக்கள், சாலைகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. மேலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவையும் நடைபெற்றது. இதற்காக நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டாலும், அந்த பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாகவே உள்ளது.
இதில் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகள் மோசமாக மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு உள்ளது. பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழைகின்ற பகுதிகளில் குழிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
சேறும் சகதியுமாக...
மேலும் தற்போது பெய்து வரும் கனமழையால் நெல்லை சந்திப்பு பகுதி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் எங்கே பள்ளம் இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்த தச்சநல்லூர் மண்டல அலுவலகம் செல்லும் சாலையும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதைப்போல் நெல்லை டவுன் வழுக்கோடையில் இருந்து டவுன் ஆர்ச் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகிறார்கள்.
நெல்லை தெற்கு பாலபாக்யா நகர், சிந்துபூந்துறை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், பெருமாள்புரம் என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட இடங்களிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலை ஓரங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. சில இடங்களில் மாநகராட்சி சார்பில் மண் கொட்டப்பட்டு உள்ளது. அதுவும் தற்போது பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் பணிகள் நடைபெறுவதால் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நெல்லை மாநகர பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழை நேரங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை மாநகராட்சி நிர்வாகத்தினர் மின்மோட்டார் வைத்து அகற்ற வேண்டும். சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதி குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Related Tags :
Next Story