‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
அரசு பள்ளி கட்டிடம் சேதம்
சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சி மந்தநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. மழைக்காலத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதோடு, சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளி கட்டிடத்தை சரிசெய்ய வேண்டும். -சுதர்சன், மந்தநாயக்கன்பட்டி.
துர்நாற்றம் வீசும் மலைப்பாதை
ஆத்தூர் தாலுகா சித்தரேவில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்லும் மலைப்பாதையின் இருபக்கத்திலும் குப்பைகள், கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் சாலையோரத்தை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் மலைப்பாதையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு உருவாகும் முன்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயம், சித்தரேவு.
பாதசாரிகளுக்கு சாலையில் கோடு
தேனி பழைய பஸ்நிலையம் முன்பு பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வசதியாக வெள்ளைநிறத்தில் கோடுகள் வரையப்பட்டு இருந்தன. தற்போது அவை அழிந்து விட்டன. இதனால் வாகனங்கள் வெள்ளை கோடு வரைந்த பகுதி வரை வந்து நிற்கின்றன. இதனால் சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பாதசாரிகளின் வசதிக்காக சாலையில் கோடுகள் வரைய வேண்டும்.
-சுந்தரம், சிலமலை.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் 13-வது வார்டு மதுரைவீரன் தெருவில் குடிநீர் குழாய் உள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிக்குமார், சின்னமனூர்.
சேதமான மின்கம்பம் மாற்றப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி அந்தோணியார்தெருவில் செபஸ்தியார் ஆலயம் அருகில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. கனமழை அல்லது பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். எனவே, மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
-வேதமுத்து, பள்ளப்பட்டி.
Related Tags :
Next Story