மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்
1½ ஆண்டுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார். காதர்பாட்சா எம்.எல்.ஏ. சிலம்பம் சுற்றி உற்சாகமூட்டினார்.
ராமநாதபுரம்,
1½ ஆண்டுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார். காதர்பாட்சா எம்.எல்.ஏ. சிலம்பம் சுற்றி உற்சாகமூட்டினார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,531 பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்காக 264 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துவருகின்றன.
இதனை தொடர்ந்து நேற்று 1 முதல் 8 வரையிலான 1,249 பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஏறத்தாழ 1½ ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடைகள் அணிந்து புத்தக பைகளுடன் முககவசம் அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
மாலை அணிவித்து வரவேற்பு
மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் அடைமழை பெய்து வந்த நிலையிலும் மாணவ மாணவிகள் மழையை பொருட்படுத்தாது பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா குறைந்துவிட்டதால் அச்சமின்றி பெரும்பாலும் அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளிக்கு வந்தனர். இவர்களை பள்ளிகளில் அரசின் உத்தரவின்படி மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் மாலை அணிவித்து வரவேற்றார்.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவ-மாணவிகளை சிலம்பொலி கிராமிய கலைக்குழு மற்றும் மல்லர் கம்பம் கழகம் சார்பில் சிலம்பமாசிரியர் லோகசுப்பிரமணியன் தலைமையில் கலைக்குழுவினர், மாணவ-மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், சுருள்வாள், சக்கரபானம், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகமாக வரவேற்றனர்.
சிலம்பம் சுற்றிய எம்.எல்.ஏ.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சிலம்பாட்டம் ஆடி மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர்வேணி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story