அங்கன்வாடியை திறந்த முன்னாள் அமைச்சர்; தி.மு.க.வினர் வாக்குவாதம்


அங்கன்வாடியை திறந்த முன்னாள் அமைச்சர்; தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:59 PM IST (Updated: 1 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

சேவூர் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார். அதில் தி.மு.க.வினர் பங்கேற்று முதல்-அமைச்சர் படத்தை ஏன் வைக்கவில்லை? எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

ஆரணி

சேவூர் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார். அதில் தி.மு.க.வினர் பங்கேற்று முதல்-அமைச்சர் படத்தை ஏன் வைக்கவில்லை? எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

புதிய அங்கன்வாடி மையம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ஆச்சாரி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி தலைமையில் நடந்தது. 

குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் கண்ணகி வரவேற்றார். 
விழாவுக்கு வந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசி சுகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர்,  ஊராட்சியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை அழைக்கவில்லை? எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அதிகாரியை சத்தம் போட்டனர்

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நான் தான் உங்களை அழைத்தேனே, அதிகாரிகள் உங்களை அழைக்கவில்லையா? எனக் கேட்டப்படியே அங்கன்வாடி மையத்துக்குள் சென்று விட்டார். 

அங்கன்வாடி திறப்பு விழா முடிந்ததும் முன்னாள் அமைச்சர் உள்ளே சென்று படத்துக்கு பூஜை செய்து குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது, அங்கு முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படங்கள் மட்டுமே இருந்ததைப் பார்த்ததும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனை சத்தம் போட்டனர். 

கருணாநிதி படத்துக்கு மலர் தூவினர்

தற்போதைய முதல்-அமைச்சர் படத்தைக் கூட ஏன் வைக்கவில்லை? எனக் கேட்டு கூச்சலிட்டவாரே தி.மு.க. நிர்வாகிகள் அங்கன்வாடியில் இருந்து வெளியேறி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை மட்டும் கொண்டு வந்தனர். 

அதற்குள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விட்டு, அங்கிருந்து வெளியே சென்று விட்டார். 

அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, மீண்டும் குத்து விளக்கேற்றி விழாவில் பங்கேற்றனர். 

அமைதிகாத்த அ.தி.மு.க.வினர்

பின்னர் தி.மு.க.வினர் அதிகாரிகளை சரமாரியாக திட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க. வினர் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டதால், அதிகாரிகளும் அமைதியாக இருந்தனர்.

Next Story