கடலூர் மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள்
கடலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 லட்சம் வாக்காளர்களில் ஆண்களை விட, 33 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த 19.3.2021 முதல் தொடர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. அவை உரிய பரிசீலனைக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்து நேற்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம், 2022-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 46 ஆயிரத்து 960 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 56 ஆயிரத்து 480 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 90 ஆயிரத்து 235 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 245 பேரும் ஆவர். இவற்றில் ஆண்களை விட 33 ஆயிரத்து 755 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
21 லட்சம் வாக்காளர்கள்
அதனை தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 46 ஆயிரத்து 960 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பணிக்கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்
அதன்படி வருகிற 30-ந் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்படும். மேலும் வருகிற 13, 14-ந் தேதிகள் மற்றும் 27, 28-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் முடிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஞ்ஜித்சிங், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி, நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி திலகர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story