சேலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், நவ.2-
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சேலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் நடந்த இந்த உண்ணாவிரதத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், மாநில தணிக்கையாளர் தங்கராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தின்போது, பல்வேறு தொற்று நோய்களில் இருந்து தமிழக மக்களை காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 1,002 தனித்திட்ட நிலை-1 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் பொது சுகாதார துறையில் தொடர்ந்து இயங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஒப்புதல் வழங்க வேண்டும்
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொது சுகாதாரத்துறையில் பல்வேறு தனித்திட்டங்கள் உருவாக்கப்பட்டதால் 1,002 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் இருந்தன. ஆனால் தற்போது அந்த பணியிடங்கள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. இதனால் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்தநிலையில் தற்போது 50 ஆயிரம் மக்கள் தொகையை கவனித்து வருகிறோம். கொரோனா பரவல் காலங்களிலும் ஞாயிறுக்கிழமை விடுமுறை கூட எடுக்காமல் பணியாற்றினோம்.
Related Tags :
Next Story