கேரள நடுக்கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள்
கேரள நடுக்கடல் பகுதியில் விசைப்படகு என்ஜின் பழுதாகி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும் என அரசுக்கு தூத்தூர் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லங்கோடு,
கேரள நடுக்கடல் பகுதியில் விசைப்படகு என்ஜின் பழுதாகி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும் என அரசுக்கு தூத்தூர் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மீனவர்கள்
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஏசுதாசன் (வயது 41). இவருக்கு சொந்தமான ரோக்கிங் ஸ்டார்ஸ் என்ற விசைப்படகில் தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்களான ததேயூஸ் (59), அருள்(45), கிறிஸ்துதாசன்(25), ஜிஜின்(25), ஆன்டணி (53), குமார், பூத்துறை பகுதியை சேர்ந்த தோமஸ்(33), இனயத்தை சேர்ந்த ஆன்றோ(40), ராமேசுவரத்தை சேர்ந்த மரியான்(20), மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39), கேரள மாநிலம் திருவனந்தபுரம் புல்லுவிளையை சேர்ந்த ஆன்டணி மற்றும் படகின் உரிமையாளர் ஏசுதாசன் உள்பட 12 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடந்த 10 நாட்களாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்தனர். பின்னர், அந்த மீன்களை கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக 31-ந் தேதி கரை நோக்கி புறப்பட்டனர்.
என்ஜின் பழுது
அதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் கேரள மாநிலம் கொல்லம் துறைமுகத்தில் இருந்து சுமார் 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகின் என்ஜின் பழுதானது. இதனால், அவர்கள் படகை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. படகை கரைக்கு கொண்டு வர மீனவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சேட்டிலைட் போன் மூலம் குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தூத்தூர் மீனவ சங்கங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை மீனவர்களை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விசைப்படகில் 12 மீனவர்களுடன் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்கள் இருப்பதாகவும் அவற்றை சரியான நேரத்தில் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தால் மட்டுமே நல்ல விலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இல்லை என்றால் அனைத்தும் கெட்டு போய் விடும் என்றும் மீனவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
மீனவ சங்கம் கோரிக்கை
வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நீடித்து வருவதால், தற்போது குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்தூர் மீனவ சங்கத்தை சேர்ந்த மீனவர்களும் நடுக்கடலுக்கு சென்று படகு பழுதாகி தவிக்கும் மீனவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடுக்கடலில் பரிதவித்து வரும் மீனவர்களையும், படகையும் பத்திரமாக மீட்டு கரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்தூர் மீனவ சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணியும் மீனவர்களை மீட்கக்கோரி தமிழக அரசுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story