சென்னை தலைமை செயலகத்தில் பெண் காவலர் பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு


சென்னை தலைமை செயலகத்தில் பெண் காவலர் பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 2 Nov 2021 6:08 AM GMT (Updated: 2 Nov 2021 6:17 AM GMT)

சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான பெண் காவலர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.



சென்னை,


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.  இதன்பின்பு பரவல் குறைந்த சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதனால் கூடுதலானோர் பணிக்கு திரும்பியுள்ளனர்.  தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

சென்னையில் தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வந்த நிலையில், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது.  கனமழையால் மரம் சாய்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதில், போக்குவரத்து தலைமை பெண் காவலர் கவிதா என்பவர் மீது மரம் விழுந்துள்ளது.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.  போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இந்த சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பலியான பெண் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.


Next Story