நெல்லையில் நேற்று கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்


நெல்லையில் நேற்று கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்
x
தினத்தந்தி 2 Nov 2021 8:11 PM IST (Updated: 2 Nov 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்

நெல்லை:
நெல்லையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வெளுத்து வாங்கிய மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. பிற்பகலில் வெயில் அடித்தது.
பகல் 2.30 மணி அளவில் திடீரென்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 40 நிமிடங்கள் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. அதை தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதே போல் பேட்டை, முக்கூடல் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் தண்ணீர்
இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநகரில் உள்ள சாலைகளில் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக கிடந்தன. இந்த நிலையில் பலத்த மழையால் மண் பகுதி சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சாலைகள் உள்ளன.
மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டாலும் வாகனங்கள் செல்லும் போது மீண்டும் பள்ளங்கள் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சாலைகளில் தண்ணீர் முழுமையாக நிரம்பி கிடப்பதால் எங்கே ரோடு இருக்கிறது? எங்கே பள்ளம் இருக்கிறது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி பயணம் செய்கிறார்கள். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
மரம் சாய்ந்தது
நெல்லை மணிமூர்த்தீசுவரத்தில் பழமையான பெரிய வாகை மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு படையினர், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு, மின்பாதை சீரமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டது.
பாபநாசம் அணை
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 135.35 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 1,225 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,035 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 82 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணை நீர்மட்டம் 83 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.56 அடியாகவும் உள்ளது.
மழை அளவு
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடனாநதி அணை -12, கருப்பாநதி அணை -4, குண்டாறு அணை -4, அடவிநயினார் அணை -15, ஆய்க்குடி -7, செங்கோட்டை -3, தென்காசி -11, சங்கரன்கோவில் -4, சிவகிரி -7.
இதுதவிர நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அம்பை -13 மில்லி மீட்டர், சேரன்மாதேவி -20, நாங்குநேரி -2, பளையங்கோட்டை -44, பாபநாசம் -5, நெல்லை -22 மில்லிமீட்டர் பதிவானது.

Next Story