ஊட்டியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.


ஊட்டியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
x
தினத்தந்தி 2 Nov 2021 8:20 PM IST (Updated: 2 Nov 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

ஊட்டி

ஊட்டியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இறந்தவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். 

கல்லறை திருநாளையொட்டி ஊட்டி மேரீஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதில் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.

காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்தனர். 

அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து இருந்ததை காண முடிந்தது. கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியும், பிரார்த்தனை செய்தும் தங்களது குடும்பத்தினருடன் இறந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தினர்.

சிறப்பு பிரார்த்தனை

தொடர்ந்து மாலையில் மறை மாவட்ட ஆயர் தலைமையில் காந்தல் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மலர்கள், மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட கல்லறைகள் மந்திரிக்கப்பட்டது. இறந்தவர்களுக்காக வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் உண்டு என்று நம்பப்படுகிறது.

அதேபோல் மற்ற கத்தோலிக்க திருச்சபைகளிலும் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளை ஒட்டி சிறப்பு ஆராதனை நடந்தது.

 கிறிஸ்தவர்கள் ஆலயத்துக்கு வந்து தங்களது நெருங்கிய உறவினர்கள் இறந்ததை நினைவுகூர்ந்து ஜெபம் செய்து சென்றனர். மேலும் பங்கு தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

Next Story