நெல்லை, தாம்பரம் ரெயிலை தென்காசி வழியாக தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்


நெல்லை, தாம்பரம் ரெயிலை தென்காசி வழியாக தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்
x
தினத்தந்தி 2 Nov 2021 4:16 PM GMT (Updated: 3 Nov 2021 10:32 AM GMT)

நெல்லை, தாம்பரம் ரெயிலை தென்காசி வழியாக தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்

நெல்லை:

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சிறப்பு ரெயில்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 100 முதல் 150-ஐ தாண்டிய நிலையில், தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி சென்னைக்கு ரெயில்களே இல்லாத வழித்தடமான, நெல்லையில் இருந்து தென்காசி வழித்தடத்தில் சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக சென்னை தாம்பரத்துக்கு மறுநாள் காலை 7.55 மணிக்கு செல்கிறது.

பயணிகள் வரவேற்பு

இந்த அறிவிப்புக்கு ரெயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், ‘‘அம்பை, பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்த எம்.பி.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சிறப்பு ரெயில் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன் அடைவர். எனவே இந்த வழித்தடத்தில் நெல்லை -தென்காசி -தாம்பரம் சிறப்பு ரெயிலை நிரந்தர வாராந்திர ரெயிலாக இயக்க வேண்டும்’’ என்றார்.

Next Story