முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க தி.மு.க. தவறி விட்டது
முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை பாதுகாக்க தி.மு.க. தவறி விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி:
ஆலோசனை கூட்டம்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஒரு ஓட்டலில் உள்ள கூட்டரங்கில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை போற்றும் வகையில் அவருக்கு தமிழக-கேரள எல்லையான கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் மணிமண்டபமும், முழு உருவ வெண்கல சிலையும் அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைக்கப்பட்டு ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.
மேலும் பென்னிகுவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததும் அ.தி.மு.க. அரசு தான். கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக அந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
அணையின் உரிமை
அணையில் இருந்து 999 ஆண்டுகளுக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவும், முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்கும் உரிமையும் தமிழகத்துக்கு இருக்கிறது. பேபி அணையை பலப்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரரும் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை கேரள அரசு பணி செய்ய விடாமல் இடையூறு கொடுத்தது.
இவ்வளவு காலமும் முல்லைப்பெரியாறில் தண்ணீரை நாம் தான் திறந்தோம். ஆனால் தற்போது கேரள மந்திரிகளும், அதிகாரிகளும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்துள்ளனர். அதுவும் 142 அடி வரை தண்ணீர் நிரம்பாமல், 138.5 அடி இருக்கும் போதே திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனோ, தமிழக அதிகாரிகள் துணையுடன் தான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை பாதுகாத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால், இன்றைய தி.மு.க. அரசு அணையின் உரிமையை பாதுகாக்க தவறி விட்டது.
அ.தி.மு.க. சார்பில் போராட்டம்
கேரள அரசின் முறையற்ற செயலுக்கும், அதற்கு துணை போகும் தி.மு.க. அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற 9-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story