கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு உற்சாகமாக வந்த மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு  உற்சாகமாக வந்த மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 10:03 PM IST (Updated: 2 Nov 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. உற்சாகமாக வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நவம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனால் நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை.

பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 522 அரசு தொடக்கப் பள்ளிகளும், 72 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், 105 ,தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப் பள்ளிகளும், 203 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 18 அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும், 11 ,தனியார் மற்றும் சுயநிதி நடுநிலைப் பள்ளிகளும் என ஆக மொத்தம் 931 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆரத்தி எடுத்து...

அந்த வகையில் கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவுவாயிலில் இருபுறமும் வாழை மரங்கள், தோரணங்கள், காகித கொடிகள் கட்டப்பட்டிருந்தது. பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை தலைமையாசிரியர் தென்றல் வாசுகி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆரத்தி எடுத்து மலர்தூவி, பூங்கொத்து கொடுத்து, சந்தனம் வைத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்து, கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, முககவசத்துடன் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரவைத்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்தனர்.

உற்சாகமாக வந்த மாணவர்கள்

இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தோரணங்கள் கட்டப்பட்டு, மேளதாளத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டதால், லேசாக பெய்த மழையை பொருட்படுத்தாமல் நேற்று மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்ததை காணமுடிந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் 19 மாதங்களுக்கு பிறகு தன்னுடன் படித்தவர்களை நேரில் பார்த்தவுடன் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 

Next Story