தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு உள்ள முதியவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா விதிமுறைகள்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள்
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்து உள்ள நேரத்தில் உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story