திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை


திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை
x
தினத்தந்தி 2 Nov 2021 11:50 PM IST (Updated: 2 Nov 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை

திருவாரூர்;
திருவாரூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தங்கியது. இதனால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
பரவலாக மழை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-ம் போக சாகுபடியான சம்பா நடவு மற்றும் தாளடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 
வெள்ளக்காடான வயல்கள்
பல இடங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்கு மறு உழவு செய்த வயல்கள் மற்றும் நடவு பணிகள் தொடங்கப்படவுள்ள வயல்களில் அதிகளவில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற அப்பகுதி விவசாயிகள் பாடுபட்டு வருகின்றனர். 
அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அன்னமரசனார், வடக்கு மற்றும் தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால்களில் கரைபுரண்டு ஓடுகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதனால் மயான கொட்டகை, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ளிட்ட இடங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. 
ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல கூடிய இடங்களிலும் மழைநீர்தேங்கி நிற்பதால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இந்த தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story