விஷ வண்டுகள் கடித்து 5 பேர் காயம்


விஷ வண்டுகள் கடித்து 5 பேர் காயம்
x

விஷ வண்டுகள் கடித்து 5 பேர் காயமடைந்தனர்.

கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் இருந்து பனங்குளம் செல்லும் வழியில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் கூடுகட்டியுள்ளன. நேற்று காலை இந்த வழியாக வாகனங்களிலும் நடந்தும் சென்றவர்கள் பலரை விஷ வண்டுகள் விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதில் குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மகன் கிஷோர், சாந்தகுமார் மகன் விஷ்வா, பழனிவேல் மகன் தங்கவேல், மாணிக்கம் மகன் ஜீவானந்தம், ராஜா உள்பட மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் மயக்கமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். கிஷோர், விஷ்வா, ராஜா ஆகியோரை மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி உடனடியாக கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அதிக விஷத்தன்மை கொண்ட வண்டுகள் என்பதால் இரவில் அழிப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் அண்ணாநகர் வழியாக ஏராளமான மக்கள் சென்று வருவதால் அந்த வழியாக சென்றால் விஷ வண்டுகளால் ஆபத்து உள்ளது என்று முன்னெச்சரிக்கையாக கிராம நிர்வாக அலுவலர் கிராமத்திற்கான வாட்ஸ்-அப் குழுவில் குரல் பதிவு பதிவிட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த வழியாகச் செல்லாமல் ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர். இந்த எச்சரிக்கை பதிவை பார்த்து பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story