குமரி ஆசிரியரின் மனைவி டெல்லியில் மீட்பு
பஞ்சாப்பில் தாத்தா இறந்து விட்டதாக கூறி உறவினர்களால் ரெயிலில் கடத்தப்பட்ட காதல் மனைவியை, குமரி ஆசிரியர் விமானத்தில் பறந்து சென்று ெடல்லியில் வைத்து மீட்டார்.
திங்கள்சந்தை,
பஞ்சாப்பில் தாத்தா இறந்து விட்டதாக கூறி உறவினர்களால் ரெயிலில் கடத்தப்பட்ட காதல் மனைவியை, குமரி ஆசிரியர் விமானத்தில் பறந்து சென்று டல்லியில் வைத்து மீட்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பஞ்சாப் பெண்ணுடன் காதல்
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பஞ்சாப் ராஜ்பாட்டி புதல்டாவை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். இங்கு காதலன் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதலர்கள் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.
குமரிக்கு வந்த உறவினர்கள்
இந்தநிலையில் இளம்பெண் பஞ்சாபில் உள்ள தனது குடும்பத்தினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இளம்பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் கடந்த 27-ந் தேதி பஞ்சாபில் இருந்து குமரிக்கு வந்தனர்.
அவர்கள் குருந்தன்கோட்டில் உள்ள இளம்பெண்ணை பார்க்க சென்றனர். அங்கு அவர்களை வரவேற்ற ஆசிரியர், தனது மனைவி மூலம் விருந்து வழங்கினார். மேலும் இருவீட்டாரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர்.இந்தநிலையில் பஞ்சாபில் உள்ள தாத்தா இறந்து விட்டதாகவும், இறப்பு சடங்குகளில் பங்கேற்க மகளை அழைத்து செல்ல வேண்டும் எனவும் அந்த பெண்ணின் தாயார் கூறினார். வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் பழகியதால் ஆசிரியரின் குடும்பத்தினர் இளம்பெண்ணை அவரது தாயுடன் ெரயிலில் அனுப்பி வைத்தனர்.
கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்
ெரயிலில் செல்லும்போது தனது குடும்பத்தினரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ெரயிலில் செல்லும்போதே தனது கணவரை தொடர்பு கொண்டு பெற்றோர் பிரிக்க சதி செய்ததை தெரிவித்தார். எனவே, பஞ்சாப் செல்வதற்குள் தன்னை மீட்கும் படி குறுஞ்செய்தி அனுப்பினார். இதனால் ஆசிரியரின் குடும்பத்தினர் பதறிப்போயினர். இதுகுறித்து ஆசிரியரின் தந்தை இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இது குறித்து ெரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விமானத்தில் பறந்து சென்றனர்
அத்துடன் ரெயில் பஞ்சாப் செல்லும் வழியில் டெல்லியில் மடக்கி பிடித்து இளம்பெண்ணை மீட்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து ஆசிரியரும் போலீசாரும் விமானத்தில் டெல்லிக்கு பறந்து சென்றனர். அங்கு வைத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் இளம்பெண்ணை மீட்டனர்.
இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது அவர் காதல்கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் அவரை, கணவருடன் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, உறவினர்களால் கடத்தப்பட்ட தன்னை சினிமா பாணியில் மீட்டு கணவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு வட மாநில இளம்பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story