‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தரமற்ற சாலை
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மசூதி தெருவில் பள்ளம் மேடு பார்க்காமல் தரமற்ற முறையில் தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இதனால் இந்த சாலை விரைவில் சேதம் அடைந்துவிடும். அதிகாரிகள் கவனிப்பார்களா?
- பொது மக்கள், ஆவடி
பயன்பாடின்றி கிடக்கும் பொது கழிப்பறை
சென்னை அடையாறு இந்திராநகர் 11-வது குறுக்குத்தெரு சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் நீண்டகாலமாக திறக்கப்படாமலேயே இருக்கிறது. பயன்பாடின்றி உள்ள இக்கழிப்பிடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா?
- த.சிவா, அடையாறு.
சாலையில் ஓடும் கழிவுநீர்
சென்னை பட்டாபிராம் மாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு பரவி வருகிறது. பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், பட்டாபிராம்.
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள்
சென்னை ஆவடி பாலவேடு ஊராட்சி காமராஜர் நகர் 1-வது குறுக்குத்தெருவின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. இவை வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறு தரும் இந்த மின்கம்பங்களை அகற்றி தெருவின் ஓரமாக நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள், காமராஜர் நகர்.
மூடப்படாத பள்ளத்தால் அவதி
சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் மெயின் ரோடு இரவீஸ்வரர் கோவில் அருகில் சாலையில் உள்ள பள்ளம் பல மாதங்ளாக சரி செய்யபடாமல் உள்ளது. சாலையில் உள்ள பள்ளம் இருக்கும் இடத்தில் ஒரு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்பகுதியில் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருக்கிறது.
- மூர்த்திங்கர் ரோடு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.
பராமரிப்பில்லாத பாலம்
சென்னை அமைந்தகரை எம்.எச்.காலனியில் உள்ள மாதா கோவில் தெரு மற்றும் திருவள்ளுவர்புரத்தை இணைக்கும் பாலம் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பாலத்தின் கீழே குப்பைகள் பெருமளவு சேர்ந்திருக்கிறது. இந்த பாலத்தை சீரமைப்பதுடன், சேர்ந்துள்ள குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், அமைந்தகரை.
சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கன்னியம்பாளையம் கிராமத்தில் உள்ள ஞாயிறு முதல் நிலை ஊராட்சி பள்ளி மிகவும் பாழடைந்து போயிருக்கிறது. கட்டிட சுவர்களும் சிதிலமடைந்து இருக்கிறது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். இந்த பள்ளியை இடித்து, புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- கே.ஜனார்த்தனன், சோழவரம்.
சாலை வசதி ஏற்படுத்தப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள தெருக்களில் நீண்ட காலமாக சாலைவசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தெருக்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. எனவே இதனை கருத்தில்கொண்டு இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.
- பொதுமக்கள், மவுத்தம்பேடு.
மூடி உடைந்த மழைநீர் வடிகால்வாய்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட மடிப்பாக்கம் அய்யப்பா நகரில் (அம்மா உணவகம் எதிரில்) பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்வாய்களின் மூடி உடைந்தும், பெயர்ந்தும் இருக்கின்றன. மழைக்காலம் என்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- கிஷோர், மடிப்பாக்கம்.
எரியாத மின்விளக்கு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவில் உள்ள மின்விளக்கு எரியாத நிலையில் இருக்கிறது. இதனால் மாலை, இரவு வேளைகளில் இத்தெருவில் நடமாடவே பொதுமக்கள் தயங்குகிறார்கள். மேலும் அருகேயுள்ள புதர் பகுதிகளில் இருந்து பாம்புகள் நடமாட்டமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே இத்தெருவில் மின் விளக்கு எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், மதுராந்தகம்.
மும்முனை சந்திப்பில் சிக்னல் தேவை
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் என்ற இடத்தில் மும்முனை ரோட்டில் சிக்னல் இல்லை. பெருங்களத்தூர் கோயம்பேடு நோக்கி வெளியூர் பஸ்கள் அதிகமாக இந்தப்பக்கம் வருவதால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சிரமம் அடைகிறார்கள். அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-கீதா ரத்னகுமார், செங்கல்பட்டு மாவட்டம்
நாய்கள் தொல்லை
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகருக்கு உள்பட பிரதான சாலைகளில் நாய்கள் தொல்லை பிரதான பிரச்சினையாக இருக்கிறது. நாய்கள் ஒன்றுக்கூடி துரத்துகின்றன. இதனால் அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை இருக்கின்றன.
வி.எஸ்.கணபதி, சமூக ஆர்வலர்.
சாக்கடை கழிவு அகற்றப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேருநகர் கரிகார தெருவில் கடந்த வாரம் 23-ந்தேதி அன்று பேரூராட்சி ஊழியர்களால் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு தெருவோரம் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் அந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. இந்த குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி வருவதால் தெரு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
-கரிகாரத் தெரு பொதுமக்கள்.
Related Tags :
Next Story