திருத்தணியை சேர்ந்த வாலிபர் மர்மச்சாவு - உறவினர்கள் சாலை மறியல்
திருத்தணியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாடூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ். விவசாயி. இவரது மகன் ராசுகுட்டி (வயது 25). இவர் அதே கிராமத்தை சேர்ந்த நூர் ராஜ் என்பவரது மகள் கீர்த்தனா (20) என்பவரை காதலித்து வந்தார். கீர்த்தனாவும் ராசுக்குட்டியை விரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு பெண் வீட்டார் மற்றும் ராசுகுட்டியின் உறவினர்களும் சேர்ந்து நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை. ஆகையால் பிரிந்துவிட வேண்டும் என்று இருவரையும் பிரித்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக ராசுக்குட்டி கீர்த்தனாவுடன் சேர்ந்து வாழ பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இருவரும் சேர்ந்து வாழ பெண் வீட்டு் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராசுகுட்டியை காணவில்லை என்று அவரது தந்தை அன்புராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.
ராசுகுட்டி கிடைக்காததால் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காணாமல் போன ராசுகுட்டியை கண்டுபிடிக்க ஆவன செய்வாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரினீத் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களுடைய செல்போன் எண்கள் மற்றும் அனைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியபாளையம் பகுதியில் ஆற்றங்கரை ஓடை பகுதியில் ராசுகுட்டி பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் ராசுகுட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கொலை வழக்காக மாற்றி் விசாரித்தனர். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அந்த பெண்ணின் தந்தை நூர்ராஜ் மற்றும் பெண்ணின் தாய் மாமன்கள் சக்கரவர்த்தி, பைரவன், வெங்கடேசன், மற்றும் புருஷோத்தமன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்களில் தாய்மாமன்கள் சக்கரவர்த்தி, பைரவன் ஆகியோர் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ராசுகுட்டியின் உறவினர்கள் 200 பேர் திடீரென்று திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே நேற்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசுகுட்டியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு மணி நேரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரினீத் நேரில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் தாமதமாக விசாரணை மேற்கொண்டதால்தான் ராசுகுட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி ராசுக்குட்டி இறப்புக்கு காரணம் போலீஸ் அதிகாரிகளே என்றுகூறி போலீசாருடன் உறவினர்கள் பேச்சுவார்தை நடத்த மறுத்தனர்.
குற்றவாளிகளில் 5 பேரை திருவண்ணாமலையில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. சம்பவ இடத்திற்கு திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பூபதி ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story