விபத்துக்கு வித்திடும் விபரீத பயணம்
ஒரு ஆட்டோவில் 20 மாணவிகள் பயணிப்பதால் விபத்துக்கு வித்திடுவதாக உள்ளது.
கோபால்பட்டி:
கோபால்பட்டியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, மலைப்பட்டி, கணவாய்பட்டி, வடுகபட்டி, மணியகாரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவிகள் அரசு டவுன் பஸ்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
அதேநேரத்தில் ஆட்டோக்களில் பள்ளிகளுக்கு வருவதை சில மாணவிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இந்த ஆட்டோ பயணம், மாணவிகளின் உயிருக்கு உலை வைப்பதாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அதாவது, மூட்டைகளை அடுக்கி வைப்பதை போல ஒரு ஆட்டோவில் 15 முதல் 20 மாணவிகள் வரை பயணிக்கின்றனர். ஆட்டோக்களில் தொங்கியபடியும், டிரைவர் இருக்கையில் அமர்ந்தும் பயணிப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாடகைக்கு ஆசைப்பட்டு கூடுதலாக மாணவிகளை ஆட்டோ டிரைவர்கள் ஏற்றி செல்கின்றனர். பெற்றோரும் தங்களது குழந்தைகள், ஆட்டோவில் எப்படி பயணிக்கின்றனர் என்பதை சிந்திப்பதில்லை.
காண்போரை கதிகலங்க வைக்கும் இந்த காட்சி, போலீசாரின் கண்களில் படாமல் இருப்பது வியப்பாகவே உள்ளது. இதேபோல் வட்டார போக்குவரத்து துறையினரும் கண்டுகொள்வதில்லை.
இதுபோன்ற விதிகளை மீறிய பயணம், விபத்தை ஏற்படுத்தி விலை மதிப்பில்லாத மனித உயிர்களை வேட்டையாடும் என்பதில் அய்யமில்லை. விபத்து ஏற்பட்டு மாணவிகளின் உயிர் இழப்பு ஏற்படும் வரை காத்திருக்காமல் துரிதமாக செயல்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
----------
Related Tags :
Next Story