பண்டிகை கால பதார்த்தங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சாிக்கை


பண்டிகை  கால பதார்த்தங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சாிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2021 8:05 PM IST (Updated: 3 Nov 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

ீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பலகாரங்கள்

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகளின் விற்பனைகளும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி வருகின்றனர். எனவே, இனிப்பு மற்றும் கார வகை போன்ற உணவு பதார்த்தங்களின் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளை பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

சான்றிதழ்

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உள்பட அனைத்து இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செயய வேண்டும். இந்த வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

கலப்படம்

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
ஸ்வீட் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகர்கள் அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். ஸ்வீட் ஸ்டால்களில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் எண்ணெய் விவரங்களை கடையில் நுகர்வோர்களின் பார்வையில் தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துதல் கூடாது. பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

புகார்

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story