மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே கடம்பாகுளம் வடிகால் செல்லும் தாம்போதி பாலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ஆறுமுகநேரி, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகலிலும், இரவிலும் மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. மேலும் அதை சுற்றியுள்ள வரண்டியவேல், கீரனூர், தலைவன் வடலி போன்ற பகுதிகளில் வயலுக்குள் தண்ணீர் சென்றது. இதனால் வாழை தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்தநிலையில் கடம்பாகுளத்தில் உள்ள உபரி நீரும் இந்த வடி வாய்க்கால் வழியாகத்தான் கடலுக்குச் செல்லும். மேலும் கடம்பாகுளத்திற்கு மேல் உள்ள ஒரு குளத்திலும் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் இதே வாய்க்கால் வழியாக கடலுக்கு செல்வதால் தண்ணீர் வரத்து அதிகமானது.
பாலத்தில் அடைப்பு
ஆனாலும் தற்காப்பு நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர், தோட்டக்கலை துறையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் அந்த பாலத்தின் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
மேலும் அங்கு தண்ணீர் கடலுக்கு செல்வதற்கான வழியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களையும், சாகுபுரம் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள தரைமட்ட பாலத்தில் அடைப்பு இருந்ததையும் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் கண்ணன், சமூக நலத்திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் பாலத்தில் ஒரு கரையை உடைத்து தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனாலும் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அமைச்சர் பார்வையிட்டார்
இந்நிலையில் நேற்று காலையில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், ஆகியோர் தண்ணீர் பந்தல் தரைமட்ட பாலம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அவர்கள் தண்ணீர் பந்தல் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் பகுதியை பார்வையிட்டு தண்ணீர் கடலுக்கு செல்வதற்கு உள்ள சாகுபுரம் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள இடத்தையும் பார்வையிட்டனர். அங்கு சென்று அந்த பாலத்தில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்த பகுதியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரி அண்ணாதுரை மற்றும் உதவி பொறியாளர்கள் பாலமுருகன் நவீன் ஆகியோரிடம் அறிவுறுத்தினர்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, வேளாண் தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தர்ராஜன், டி சி.டபிள்யு. நிறுவன மூத்த உதவி தலைவர் சீனிவாசன், மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனஹர், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார், வரண்டியவேல் கிராம பஞ்சாயத்து தலைவர் வசந்தி ஜெயக்கொடி, ஆத்தூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் முருகப்பெருமாள், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரகுராம், மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர்கள் ஜெயக்கொடி, லிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளிடம் கேட்டறிந்தார்
தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குளம் நிரம்பியது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும். இக்குளத்தில் 10 மடைகள் உள்ளன. இதில் 10-ம் நம்பர் மடை சேதமடைந்தது. அதன் காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 600 ஏக்கர் நிலம் பாதிப்படைந்தது. இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பாதிக்கப்பட்ட இடங்களான தண்ணீர்பந்தல், மயிலோடை, அங்கமங்கலம் ஆகிய இடங்களையும், கடம்பா குளத்தையும் பார்வையிட்டார். பின்னர் சேதமடைந்த பயிர்கள் பற்றி விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் கூறுகையில், சேதமடைந்த 10-ம் நம்பர் மடையை ஷட்டர் போட்டு பாதுகாப்பாக அமைத்து தரப்படும். வாய்க்கால்களில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கருப்பசாமி, அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தாசில்தார் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, அமெச்சூர் கபடிக்கழக செயலாளர் கபடி கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story