14 பேரிடம் ரூ.65 லட்சம் மோசடி; 2 பேர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.65 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த அச்சிரம்பட்டை சேர்ந்தவர் சந்தீப்ராமன் (வயது 40). இவரிடம் அவரது பெரியப்பா மகன் காந்தி என்கிற தனசேகரன், அவரது சகோதரி அம்மு என்கிற ஜெயந்தி, இவரது கணவர் நவீன்குமார் ஆகியோர் தமிழக அரசின் உயர் பதவியில் இருப்பதாகவும், தங்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளனர்.
அதன் பிறகு சந்தீப்ராமனிடம் 4 தவணையாக ரூ.4 லட்சத்தை காந்தியும், நவீன்குமாரும் பெற்றுக்கொண்டனர். ஆனால் பணத்தை பெற்ற இருவரும் சந்தீப்ராமனுக்கு அரசு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். இதேபோல் அரசு வேலை வாங்கித்தருவதாக சந்தீப்ராமனின் உறவினர்களான புதுச்சேரி பெரியகாலாப்பட்டை சேர்ந்த வேலாயுதத்திடம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும், அச்சிரம்பட்டை சேர்ந்த அருள்குமாரிடம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரமும், சக்ஷிதாவிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரமும், கடலூர் காராமணிக்குப்பத்தை சேர்ந்த பாலயரசியிடம் ரூ.2 லட்சமும், கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த சுசேந்திரியிடம் ரூ.3 லட்சமும், இரும்பையை சேர்ந்த தேவநாதனிடம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த குமாரிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரமும் என 9 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.49 லட்சத்தை நவீன்குமார், அவரது மனைவி ஜெயந்தி, காந்தி என்கிற தனசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ரூ.49 லட்சம் மோசடி
பின்னர் சில நாட்கள் கழித்து அரசு பணி வந்து விட்டதாக கூறி அவர்கள் 10 பேரிடமும் பணி நியமன ஆணை ரசீது வழங்கியுள்ளனர். அந்த பணி நியமன ஆணையின் மூலம் அரசு வேலையில் சேர சென்றபோதுதான் அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது. அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி நவீன்குமார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பணத்தை ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள், இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் நவீன்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இந்நிலையில் நேற்று வானூர் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற காந்தி என்கிற தனசேகரனை (38) போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீன்குமார், அவரது மனைவி ஜெயந்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்னை பூந்தமல்லி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ஆறுமுகம் மகன்கள் சாம்பசிவம், பாலமுருகன் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையை சேர்ந்த முரளிகிருஷ்ணன், சென்னை மதுரவாயலை சேர்ந்த சரவணன், திருவண்ணமலை மாமங்கலத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரிடம் ரூ.16 லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பசிவத்தை (35) கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story