நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவு நீர் கலப்பதாக புகார்


நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவு நீர் கலப்பதாக புகார்
x
தினத்தந்தி 3 Nov 2021 10:50 PM IST (Updated: 3 Nov 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவு நீர் கலப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நொய்யல், 
நொய்யல் ஆறு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நொய்யல் ஆறு தொடங்கி திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவு நீருடன் சேர்ந்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் பச்சை நிறம் கலந்து வருகிறது. 
குடிநீர் மாசு
தற்போது தஞ்சாவூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும் போது காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீர் சாயக் கழிவு நீராக செல்கிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் வருவதால் நொய்யல் ஆற்றிலிருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடலில் அரிப்பு
காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் காவிரி கரையோரம் உள்ள குடிநீர் தொட்டிகளிலும், குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசுபட்டுள்ளது. பொதுமக்கள் குளித்துவிட்டு செல்லும் போது உடலில் ஒரு விதமான அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தாலும் தண்ணீரை அருந்துவதாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நொய்யல் ஆறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:- தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 2100 டி.டி.எஸ். என உள்ளது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 68 டி.டி.எஸ். என இருந்தது. 
உப்புத்தன்மை அதிகரிப்பு
நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஒவ்வொரு முறையும் திருப்பூரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் அதை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது பயிர்கள் காய்கின்றன. நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவு நீருடன் வருவதால் விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். 
நிவாரண தொகை
மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் மற்றும் காவிரி ஆறு பாசன விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படும் சாயக்கழிவு நீர் விவகாரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story