வெட்டாற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது


வெட்டாற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 3 Nov 2021 11:05 PM IST (Updated: 3 Nov 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 6-வது நாளாக கன மழை பெய்தது. இதனால் வெட்டாற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 6-வது நாளாக கன மழை பெய்தது. இதனால் வெட்டாற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
6-வது நாளாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இந்த பருவ மழையினாலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று 6-வது நாளாக விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
திருவாரூர் நகர் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
திருவாரூர் ஒன்றியம் நடப்பூர் ஊராட்சி உக்கடை கிராமம் அமைந்துள்ளது. வெட்டாற்றின் கரை பகுதி சாலை வழியாக தான் உக்கடைக்கு செல்ல வேண்டும். இங்கு சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் வெட்டாற்றின் கரை வழி சாலையை பயன்படுத்தி நடப்பூர் வழியாக பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். 
ஆற்றின் கரை உடைப்பு
இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக பெய்த தொடர் மழையால் வெட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென வெட்டாற்றின் உக்கடை பகுதியில் சுமார் 6 மீட்டர் தூரம் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுயில் வசித்து வந்த 30 குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் முழ்கின.

Next Story