மகன் தற்கொலை; அதிர்ச்சியில் தாய் சாவு


மகன் தற்கொலை; அதிர்ச்சியில் தாய் சாவு
x
தினத்தந்தி 3 Nov 2021 11:24 PM IST (Updated: 3 Nov 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவருடைய தாய் அதிர்ச்சியில் இறந்தார்.

தேனி : 

தேனி மாவட்டம் கூடலூர் 8-வது வார்டு மேக்கிலு கவுடர் தெருவை சேர்ந்தவர் ரவி. டி.வி. மெக்கானிக். இவரது மனைவி மாதா. இவர்களது மகன் ஹரிஹரன் (வயது 19). பிளஸ்-2 வரை படித்து உள்ளார். ரவி மகனை வேலைக்கு செல்லுமாறு கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் ரவிக்கும், ஹரிஹரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

பின்னர் ரவி, மனைவியுடன் மாத்திரை வாங்குவதற்கு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார். அன்று மதியம் 3 மணிக்கு உறவினர் தேவி (42) ரவியின் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு ஹரிஹரன் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். 

இதுகுறித்து அவர் செல்போனில் ரவிக்கு தகவல் தெரிவித்தார். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மாதாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரவி சேர்த்தார். 

அங்கு சிகிச்சை பலனின்றி மாதா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே வீட்டில் தூக்குப்போட்டு இறந்த ஹரிஹரனின் உடலை கூடலூர் தெற்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தற்கொலை செய்ததை அறிந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story