9 மணி நேரம் பெய்த மழையால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
தஞ்சையில் பெய்த அடைமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பெய்த அடைமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பலத்த மழைபெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.
தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் காலை 10 மணி வரை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
குடியிருப்பு பகுதியில் வெள்ளம்
இந்த மழை காரணாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை மேலவெளி ஊராட்சி பகுதியில் விஸ்தரிப்பு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் சாலைகளிலும் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
9 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால் காலை 11 மணி வரை மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். மழையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்தார்.
தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு
இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இளம் சம்பா, தாளடி நடவுப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டன. மழை காரணமாக தஞ்சை கடைவீதிகளில் காலை 11 மணி வரை மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் தார்ப்பாய் கொண்டு தங்கள் கடைகளை மூட்டை கட்டி வைத்திருந்தனர். இதனால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.
பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு கடைவீதிகளில் நடந்து சென்று பொருட்களை வாங்கினர். மழை நின்ற பின்னர் தரைக்கடை வியாபாரிகள் மீண்டும் தங்கள் கடைகளை விரித்து விற்பனையை தொடங்கினர். மழை நின்றதால் கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதின.
மழைஅளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேராவூரணி 165, அணைக்கரை 107, பட்டுக்கோட்டை 90, மஞ்சளாறு 79, ஈச்சன்விடுதி 67, திருவிடைமருதூர் 62, வெட்டிக்காடு 54, கும்பகோணம் 51, அதிராம்பட்டினம் 50, அய்யம்பேட்டை 38, பாபநாசம் 32, நெய்வாசல் தென்பாதி 30, திருவையாறு 28, குருங்குளம் 27, திருக்காட்டுப்பள்ளி 25, தஞ்சை 22, மதுக்கூர் 17, ஒரத்தநாடு 16, வல்லம் 14, பூதலூர் 14, கல்லணை 11.
Related Tags :
Next Story