தென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் தண்ணீர் திறப்பு


தென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 4 Nov 2021 2:20 AM IST (Updated: 4 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அச்சன்புதூர்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி, கடனாநதி அணைகளை பிசான பருவ சாகுபடிக்காக திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கடையம் அருகே உள்ள ராமநதி அணை திறக்கும் நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி, துணை தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, கடையம் யூனியன் துணை சேர்மன் மகேஷ் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஞானதிரவியம் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் அணையை திறந்து வைத்தனர். இந்த அணை மூலம் வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 943 ஏக்கர் பாசன வசதி பெறும். தொடர்ந்து 148 நாட்களுக்கு 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளர் சங்கர் ராஜ், உதவிபொறியாளர்கள் முருகேசன், பேட்டர்சன் குழந்தைராஜ், அந்தோணிராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல் கடனாநதி அணையில் இருந்தும் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

கருப்பாநதி

கடையநல்லூர் தாலுகாவில் உள்ள கருப்பாநதி அணை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தனுஷ்குமார் எம்.பி. அணையை திறந்து வைத்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் திரிகூடபுரம் அருணாச்சல பாண்டியன், சொக்கம்பட்டி கீதா மணிகண்டன், திரிகூடபுரம் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், கருப்பாநதி உதவி பொறியாளர் சரவணகுமார், கருப்பாநதி நீர் பகிர்மான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த அணை மூலம் பெருங்கால்வாய், பாப்பான்கால்வாய், சீவலன்கால்வாய், இடைக்கால் கால்வாய், கிளங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் பாசம் பெறும். இந்த தண்ணீர் நேற்று முதல் வருகிற 30-3-2022-ந்தேதி வரை 148 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. 

அடவிநயினார்

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணையும் நேற்று திறக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் மேட்டுக்கால்வாய், கரிசல்கால்வாய், பண்பொழிகால்வாய், வல்லாக்குளம் கால்வாய், இலத்தூர் கால்வாய், நயினாரகரம் கால்வாய், கிளங்காடு கால்வாய், கம்பளிக்கால்வாய், புங்கன் கால்வாய், சாம்பவர்வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இங்கும் வருகிற 30-3-2022-ந்தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 
அணை திறப்பு நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பணி ஆய்வாளர் செய்யது அலி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஜாஹிர் உசேன், மேட்டுக்கால் நீர் பகிர்மான குழு செல்லத்துரை, முகம்மது இஸ்மாயில், வாவா மைதீன், மன்சூர், தங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story