தோட்டத்தில் புகுந்து 3 பசுமாடுகளை அடித்து கொன்ற புலி
குண்டலுபேட்டை அருகே பட்டப்பகலில் தோட்டத்தில் புகுந்து 3 பசுமாடுகளை புலி அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
கொள்ளேகால்: குண்டலுபேட்டை அருகே பட்டப்பகலில் தோட்டத்தில் புகுந்து 3 பசுமாடுகளை புலி அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
வனவிலங்குகள் அட்டகாசம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் வடயனபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
அங்கு வசிப்பவர் ராஜேந்திரா. இவர் 3 பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வடயனபுரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரா தனக்கு சொந்தமான 3 பசுமாடுகளையும் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டிவைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
3 பசுமாடுகளை கொன்றது
அப்போது வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று இரைதேடி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. மேலும் ராேஜந்திராவின் தோட்டத்திற்குள் புகுந்து புலி, அங்கு கட்டி போடப்பட்டு இருந்த 3 பசு மாடுகளையும் தாக்கி கொன்றது. பின்னர் ஒரு பசுமாட்டின் இறைச்சியை பாதி தின்றுவிட்டு புலி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.இதற்கிடையே ராஜேந்திரா தோட்டத்திற்கு திரும்பி வந்தார்.
அப்போது தோட்டத்தில் 3 பசுக்களும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் செத்த பசுமாடுகளின் அருகே புலி கால்தடத்தை பார்த்தார். அப்போது தான் அவர், பசுமாடுகளை புலி அடித்து கொன்றதை உணர்ந்தார். இதுபற்றி அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
ஆனாலும் வனத்துறையினர் தாமதாக வந்ததாக தெரிகிறது. இதனால் கிராம மக்கள், வனத்துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர்.
கிராம மக்கள் பீதி
இந்த சம்பவம் பற்றி அறிந்த குண்டலுபேட்டை போலீசார் அங்கு வந்து கிராம மக்களை சமாதானம் செய்தனர். அப்போது கிராம மக்கள், போலீசிடம் புலி தாக்கி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 6 பசுமாடுகள், 4 கன்றுகள் பலியாகி விட்டதாகவும், ஆனாலும் இதுவரை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினர். ஆகையால் வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர். 3 பசுக்களை புலி அடித்து கொன்றதால் வடயனபுரா கிராம மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story