களக்காடு அருகே, தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்


களக்காடு அருகே, தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 4 Nov 2021 3:26 AM IST (Updated: 4 Nov 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

களக்காடு, நவ.4-
களக்காடு அருகே, தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுப்பெண்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் லேகா (வயது 23). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சூரங்குடியைச் சேர்ந்த பரமேசுவரனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக, முருகன் தன்னுடைய மகள், மருமகனை அழைத்து இருந்தார். அதன்படி நேற்று இரவில் லேகா, அவருடைய கணவர் பரமேசுவரன் ஆகியோர் களக்காடு பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்களை அங்கிருந்து ஆட்டோவில் சிதம்பராபுரத்துக்கு அழைத்து சென்றனர். லேகா, பரமேசுவரன் ஆகியோருடன் லேகாவின் தந்தை முருகன், தம்பி பரத் ஆகியோரும் ஆட்டோவில் சென்றனர்.
வெள்ளம் இழுத்து சென்றது
களக்காடு-சிதம்பராபுரம் சாலையில் நாங்குநேரியான் கால்வாயின் குறுக்கே தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. எனவே ஆட்டோவில் இருந்து இறங்கிய லேகா உள்பட 4 பேரும் தரைமட்ட பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது வெள்ளத்தில் லேகா உள்பட 4 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.
இதில் வெள்ளத்தில் தத்தளித்த லேகாவின் கணவர் பரமேசுவரன், தந்தை முருகன், தம்பி பரத் ஆகிய 3 பேர் நீச்சலடித்து சிறிது தூரத்தில் கரை வந்து சேர்ந்தனர். ஆனால் லேகாவை மீட்க முடியவில்லை.
மீட்பு பணி தீவிரம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லேகாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர். பலத்த மழையின் காரணமாக, களக்காடு சர்ச் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
.......

Next Story