ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 5 Nov 2021 7:37 PM IST (Updated: 5 Nov 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திடீர் மழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

ஊட்டி

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திடீர் மழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. 

வருகை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து உள்ளனர். கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவர்கள் மிதி படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மோட்டார் படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

படகு சவாரி நிறுத்தம்

அங்கு ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர். காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு அலங்கார செடிகளால் அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் மதியம் திடீரென பெய்த பலத்த மழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை விட்ட பிறகு மீண்டும் படகுகள் இயக்கப்பட்டன.

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். மலர்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பச்சை பசேலென காணப்பட்ட புல்வெளிகளில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். 

ஏமாற்றம்

இதற்கிடையே பெய்த மழையால் அவர்கள் முழுமையாக பூங்காவை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கொட்டும் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடியும், சிலர் நனைந்தபடியும் சென்றனர்.
இதேபோல் ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடந்த 3-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 3 ஆயிரத்து 394 பேர் வருகை தந்தனர். தீபாவளி அன்று நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 736 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Next Story