புகார் பெட்டி
புகார் பெட்டி
குண்டும், குழியுமான சாலை
கோவை சுண்டக்காமுத்தூர் சாலையானது அங்குள்ள ஒரு தனியார் பள்ளி அருகே பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது அந்த குழிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் குழி கிடப்பது தெரியாமல் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
மணிகண்டன், சுண்டக்காமுத்தூர்.
பயணிகள் அவதி
பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தரண்குமார், கிணத்துக்கடவு.
தேங்கி நிற்கும் மழைநீர்
கோவை மாநகராட்சி 26-வது வார்டு வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு(பகுதி-2) உள்ளது. இங்குள்ள சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீஜா, வெள்ளக்கிணறு.
துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்
கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இ்ல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டேனியல், ஒண்டிபுதூர்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
ஒளிராத தெருவிளக்குகள் ஒளிர்ந்தன
கோத்தகிரி தங்கமலை 19-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடந்தன. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், இரவு நேரத்தில் வெளியே வரும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது பழுதான தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மீண்டும் ஒளிபெற்று உள்ளது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி.
தங்கவேல், கோத்தகிரி.
அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்கள்
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சாலையோரங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தை முட்புதர்களின் கிளைகள் பதம் பார்க்கின்றன. எனவே அவற்றை வெட்டி அகற்ற வேண்டும்.
த.நாகராஜ், செட்டியக்காபாளையம்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து எல்.ஐ.சி. காலனிக்கு செல்லும் சாலை பலத்த மழை காரணமாக சேதம் அடைந்து உள்ளது. மேலும் குண்டும், குழியுமாக கிடப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கோவை அபு, செல்வபுரம்.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
செட்டியக்காபாளையத்தில் இருந்து நெகமம் செல்லும் சாலையில் வடக்கு காடு பிரிவில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு நிழற்குடை இல்லாததால் பள்ளி மாணவர்கள் உள்பட பயணிகள் வெயில், மழை காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் அந்த இடத்தில் இருந்து பஸ் ஏறி செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு இருக்கையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.
க.பேச்சிமுத்து, எம்மேகவுண்டன்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை
கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் முகாமிட்டு உள்ளன. இவை துரத்தி கடிக்க வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தபட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், கோத்தகிரி.
சாலையில் அரிப்பு
உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை செப்பனிட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஸ்மான், உக்கடம்.
Related Tags :
Next Story