முல்லைப்பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில்  துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2021 8:45 PM IST (Updated: 5 Nov 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை என்றார்.

தேனி:
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. இதனிடையே தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் நீர்மட்டத்தை மேலும் உயர்த்த வேண்டாம் என்று கேரள அரசு வலியுறுத்தியது.
மேலும், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை வருகிற 11-ந்தேதி வரை 139.50 அடியாக பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், நீர்மட்டம் 139 அடியை எட்டும் முன்பே அணையில் இருந்து கடந்த 29-ந்தேதி கேரள மந்திரிகள் முன்னிலையில் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் சென்றது.
நேற்று அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 117 கனஅடியாக இருந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 813 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 8 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நேற்று காலையில் தேக்கடி வந்தனர். தேக்கடியில் இருந்து காலை 11.30 மணியளவில் 2 படகுகள் மூலம் அணைக்கு புறப்பட்டு சென்றனர்.
அமைச்சர்களுடன் அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), தளபதி (மதுரை வடக்கு), வெங்கடேசன் (சோழவந்தான்), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எல்.மூக்கையா, தங்கதமிழ்செல்வன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அணைக்கு சென்றனர்.
பகல் 12.50 மணியளவில் அவர்கள் அணைக்கு சென்றடைந்தனர். பின்னர் முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் ஆகிய இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பேபி அணையை பார்வையிட்டபோது அதை பலப்படுத்தும் பணிகள் குறித்தும், மதகுகளை பார்வையிட்டபோது கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அமைச்சர் பேட்டி
ஆய்வை முடித்துவிட்டு பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் உள்பட அனைவரும் தேக்கடிக்கு திரும்பி வந்தனர். பின்னர் தேக்கடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் மத்திய நீர்வள ஆணையம் ஒரு புதிய விதியை கொண்டுவந்துள்ளது. அதற்கு பெயர் 'ரூல் கர்வ்'. அந்த விதியின்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது? எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது? என்பதை கணக்கெடுத்துள்ளனர். அந்த கணக்கெடுப்பின்படி அணையின் நீர்மட்டம் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுத்துள்ளனர்.
அப்படி பார்க்கும்போது முல்லைப்பெரியாறு அணையில் இன்றைய நிலவரப்படி 139.50 அடி நீர்மட்டம் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ந் தேதி 142 அடி உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ம் ஆண்டில் அணை பலவீனமாக இருக்கிறது என்றும், பலப்படுத்த வேண்டும் எனவும் கூறினர். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. பின்னர் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என கோர்ட்டுக்கு சென்றோம்.
பேபி அணை
பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக நிலைநிறுத்தி கொள்ளலாம் என கோர்ட்டு கூறியது. அந்த பேபி அணையை பார்வையிட்டேன். அதில் என்ன பிரச்சினை என்றால், அந்த அணை கீழே 3 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசை கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுக கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றிவிட்டால் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தலாம்.
அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும்.
உரிமை கிடையாது
முல்லைப்பெரியாறு குறித்து பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தார்மீக உரிமை கிடையாது. 2 பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். 10 ஆண்டுகாலத்தில் அந்த துறையின் அமைச்சர்கள் ஒருவராவது இந்த அணையை வந்து பார்வையிட்டுள்ளனரா?. நான் இந்த 80 வயதில் தட்டுத்தடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியாவது சேலத்துக்காரர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறுவதைப்பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநில மந்திரிகள் நட்பாக இருந்தால் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்கலாம்.
2 அதிவேக படகு
இந்த அணைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றுவந்த படகில் தான் இன்றும் ஆய்வு செய்து வந்தேன். நல்லகாலம் வழியில் அந்த படகு நிற்கவில்லை. தமிழக அரசு சார்பில் விரைவில் இங்கு 2 அதிவேக படகுகள் வாங்கி விடப்படும்.
பேபி அணையை பலப்படுத்த 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக அனுமதி பெற முடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் நாங்கள் அனுமதி பெற்றுவிடுவோம்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் நேர்மையான, சுமுகமான முதல்-மந்திரி. அவர் காலத்தில்தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் காரில் ஏறி புறப்பட முயன்ற போது அவரிடம், கேரள அரசு புதிய அணை கட்டப் போவதாக கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், " சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் பார்வையிட்டு அணை பலமாக இருப்பதாக கூறியுள்ளனர். எனவே முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தேவையில்லை" என்றார்.
---------
இன்சைடு பாக்ஸ்
----------------
தள்ளுமுள்ளு- கலெக்டர் தடுத்து நிறுத்தம்
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக தமிழக அமைச்சர்கள் தேக்கடி ஏரிக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலரும் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக கேரளா மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். படகு குழாம் நுழைவு வாயிலை அமைச்சர்கள் கடந்து செல்ல முயன்ற போது அவர்களுடன் கட்சிக்காரர்கள் மற்றும் அதிகாரிகளும் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அமைச்சர்களுக்கு வழி விட முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நுழைவு வாயிலில் நின்ற கேரள வனத்துறையினர் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டர் என்று கூறியதும் அவருக்கு வழிவிட்டனர். அதுபோல், அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வினும் தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் குவிப்பு
அமைச்சர்கள் ஆய்வு செய்ய வந்ததால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக, கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். லோயர்கேம்பில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல், தேக்கடி ஏரியில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story