தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 5 Nov 2021 10:34 PM IST (Updated: 5 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

விழுப்புரம், 

டாஸ்மாக் விற்பனை

விழுப்புரம் மாவட்டத்தில் 122 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகளும் மற்றும் 9 அரசு மதுபான கூடங்களும் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

ரூ.14 கோடிக்கு

அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 3-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,037 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,670 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.6 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரத்து 845-க்கு மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது.
இதேபோல் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 9,079 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 10,772 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.7 கோடியே 90 லட்சத்து 29 ஆயிரத்து 130-க்கு விற்பனையானது. ஆக மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.13 கோடியே 99 லட்சத்து 64 ஆயிரத்து 975-க்கு மது வகைகள் விற்பனையானது.

கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு

கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 13-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,670 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 5,306 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தது. இதன் மூலம் ரூ.6 கோடியே 63 லட்சத்து 91 ஆயிரத்து 220-க்கும், தீபாவளி பண்டிகையான நவம்பர் 14-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,885 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 11,298 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்ததன் மூலம் ரூ.7 கோடியே 85 லட்சத்து 45 ஆயிரத்து 590-க்கும் ஆக மொத்தம் 2 நாட்களில் ரூ.14 கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 810-க்கு மது வகைகள் விற்பனையானது.
இதனை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுபானங்களின் விற்பனை ரூ.49 லட்சத்து 71 ஆயிரத்து 835 அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
தீபாவளி சமயத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுபான விற்பனை குறைந்திருக்கலாம் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story