கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Nov 2021 7:09 PM (Updated: 5 Nov 2021 7:09 PM)
t-max-icont-min-icon

கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.

நெல்லிக்குப்பம், 

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. 
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வீட்டின் சுவர் மழையில் நனைந்து இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

தொழிலாளி

கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), தொழிலாளி. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இவரது வீ்ட்டின் சுவர் முழுவதும் நனைந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டின் ஒரு பக்கமுள்ள சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீது விழுந்தது. இந்த சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி அம்பிகா, சங்கர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. 

விசாரணை

இதுகுறித்து அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடலூர் தாசில்தார் பலராமன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையினர் இடிந்து விழுந்த சுவரை பார்வையிட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story