உப்பிலியபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


உப்பிலியபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 6 Nov 2021 2:09 AM IST (Updated: 6 Nov 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய அடை மழை பெய்தது. இதன்காரணமாக கோட்டப்பாளையம் மேட்டுத்தெரு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேட்டுத்தெரு பகுதியிலுள்ள வடிகால் மற்றும் பாலங்களில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் வயல்களில் தண்ணீர் புகுந்ததாக அப்பகுதியில் வசிக்கும் ஜெயராஜ் தெரிவித்தார். 
சாலையின் இருபுறமும் வடிகால் வசதியில்லாததால், தனது வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் தனது ஓட்டு வீட்டின் மண்சுவர் ஊறிப் போய் இருப்பதாக இப்பகுதியில் வசிக்கும் டிரைவர் நித்யன் தெரிவித்தார். நடுஇரவில் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் தூங்காமல் விழித்திருந்து அகற்றிக்கொண்டே இருந்தனர். வடிகால் அடைப்புகளை ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக அகற்றியதால் நிலைமை ஓரளவுக்கு சீரானது. 
தா.பேட்டை
இதேபோல தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் குளம், குட்டைகள், வரத்து வாரிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் சம்பா நெற்பயிர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் தா.பேட்டை சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக மானாவாரியாக கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story