அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பலி


அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 2:20 AM IST (Updated: 6 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

ஜெயங்கொண்டம்:

குளத்தில் தவறி விழுந்தான்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவரது மகள் ஹரிணி(வயது 6). இவள் ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். பன்னீர்செல்வத்தின் தம்பி பாலசிங்கத்தின் மகன் லோகேஷ்(5). தீபாவளி பண்டிகையையொட்டி ஹரிணியையும், லோகேசையும் மருக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மருக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் ஹரிணியும், லோகேசும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள குளத்திற்கு அருகே சென்ற லோகேஷ் தவறி குளத்தில் விழுந்தான். இதைக்கண்ட ஹரிணி, லோகேசை காப்பாற்ற குளத்திற்குள் இறங்கினாள்.
உடல்களை தர மறுப்பு
இதில் 2 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே இருவரும் கரை திரும்பாததால் அருகில் இருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு குளத்தில் இறங்கி தேடினர். இதில் ஹரிணி, லோகேஷ் ஆகியோரை பிணமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக ஹரிணி, லோகேஷ் ஆகியோரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் 2 பேரின் உடல்களையும் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தர மறுத்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளத்தில் மூழ்கி அக்காள்-தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story