மழை வெள்ளத்தால் 41 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
மேலப்புலியூரில் மழை வெள்ளத்தால் 41 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
பெரம்பலூர்:
பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம், மேலப்புலியூர் அருகே பச்சைமலையிலும், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம் என்றழைக்கப்படும் மயிலூற்று அருவி மற்றும் செக்காத்தி பாறையில் உள்ள ஆனைக்கட்டி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
அரும்பாவூர் பெரிய ஏரி, சிற்றேரி, அரசலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் பாயும் வெள்ளாறு, கல்லாறு, சுவேத நதி, கோனேரி ஆறு, மருதையாறு ஆகிய காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்
இந்த நிலையில் தீபாவளி அன்று இரவு பச்சைமலையில் பலத்த நீர் இடி விழுந்து பெய்த கனமழையினால் பச்சைமலையில் இருந்து மேலப்புலியூர் ஏரிக்கு வரும் ஓடையில் தண்ணீர் பெருமளவு வந்தது. இதனால் மேலப்புலியூர் கிராமத்தில் மழைவெள்ளம் புகுந்ததில் 8 வீடுகள் சேதம் அடைந்தன. 41 வீடுகளில் மழைநீர் புகுந்தது. உள்ளாட்சி அமைப்பினர் பொதுமக்கள் உதவியுடன் வெள்ளநீரை வடியச் செய்து நீரை வழிந்தோட வைத்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட 29 பெண்கள் உள்பட 61 பேர் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் உணவு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story