தொடர் கனமழையால் சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
சேலத்தில் பெய்த தொடர் கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சேலம்
கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்பிறகு மாலை 6.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு வரையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, அழகாபுரம், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலத்தில் பெய்த கனமழையால் பச்சப்பட்டி, அம்மாபேட்டை, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, கிச்சிப்பாளையம் நாராயண நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இந்த பகுதிகளில் வீடுகள் தாழ்வான நிலையில் இருப்பதாலும், போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததாலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாக கூறப்படுகிறது.
சேலம் அடிவாரம் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் கன்னங்குறிச்சியில் உள்ள புதுஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. பின்னர் அதன் உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேறி மூக்கனேரிக்கு சென்றது. புதுஏரி, மூக்கனேரி ஆகிய 2 ஏரிகளும் முழுவதும் நிரம்பியதால் அதன் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தீபாவளியன்று புதுஏரிக்கு ஏராளமானோர் வந்தனர். ஒருசிலர் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏரியில் குளித்தும், சிலர் தண்ணீரை பார்த்து ரசித்தனர். சிலர் ஏரியின் கரையோரம் நின்று தங்களது செல்போன்களில் போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வெள்ளப்பெருக்கு
இதனிடையே, சேலத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைமேடு பகுதியில் திருமணிமுத்தாறு இரு கரைகளையும் தொட்டபடி செந்நிறத்தில் தண்ணீர் சென்றதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தங்களது வாகனங்களை சிறிது நேரம் நிறுத்திவிட்டு வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.
கனமழையால் சேலம் காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று காலை நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றதை காணமுடிந்தது. மாலையில் காந்தி விளையாட்டு மைதானத்தில் ஓரளவு தண்ணீர் வடிந்தது. இதையொட்டி அங்கு மாணவ-மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். சிலர் தேங்கி கிடந்த தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர்.
சேலம் அருகே டி.பெருமாபாளையம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 2 வீடுகள் இடிந்து சேதமானது. வீட்டிற்குள் வைத்திருந்த பொருட்களும் சேதமடைந்தன. புறநகர் பகுதிகளான ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
சாலை மறியல்
தேவூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தேவூர் அருகே உள்ள தண்ணிதாசனூர் 4 ரோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மின் மோட்டார்கள் மூலம் வீடுகளில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் தண்ணிதாசனூர், அரசிராமணி, பனங்காடு, ஒடசக்கரை, சென்றாயனூர் ஆகிய பகுதிகளில் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் சரபங்கா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேவூர் அருகே சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மழைஅளவு
சேலம் பகுதியில் பெய்த கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி அதன் உபரிநீர் வெளியேறியதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சிவதாபுரம், பனங்காடு மெயின் ரோட்டில் தண்ணீர் ஆறுபோல் ஓடியதை காணமுடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேலம்-66, ஆத்தூர்-63.2, பெத்தநாயக்கன்பாளையம்-24, எடப்பாடி-18.4, ஆனைமடுவு-16, வீரகனூர்-13, கரியகோவில்-11, தம்மம்பட்டி, ஏற்காடு -10, காடையாம்பட்டி-8, ஓமலூர்-5, மேட்டூர்-3.8.
Related Tags :
Next Story