ஹாரன் அடித்தபடி வேகமாக சென்றதால் ஆத்திரம்: புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்; கார் கண்ணாடி உடைப்பு
பூந்தமல்லி அருகே ஹாரன் அடித்தபடி வேகமாக சென்றதால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் புரட்சிபாரதம் கட்சி நிர்வாகியை தாக்கினர். மேலும் கார் கண்ணாடியையும் உடைத்தனர்.
ஆவடி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 36). இவர், புரட்சி பாரதம் கட்சியின் பூந்தமல்லி தெற்கு ஒன்றிய அமைப்பு செயலாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆவடி அடுத்த ஆயில்சேரி பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். கண்ணபாளையம் அருகே சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி, தனது காரில் ஹாரன் அடித்தபடி வேகமாக சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், பாலாஜியின் காரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், பாலாஜியை தாக்கியதுடன், அவரது கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் எஸ்.சி. எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேவன் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story