கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறை
வடகிழக்கு பருவ மழைக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தாசில்தார் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அனைத்து முதல் நிலை அலுவலர்கள், மண்டல குழுக்கள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்கள் என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளை இணைத்து பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மொத்தம் 14 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களை கண்காணித்திட வருவாய்த்துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ் இயங்க கூடிய வகையில் 11 துறை சார்ந்த அதிகாரிகளை கொண்ட 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தாலுகாவில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், சுனாமி முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்ட மையங்கள், மழைக்காலங்களில் பாதிக்கப்படும் தரைபாலங்கள் போன்றவற்றை தாசில்தார் மகேஷ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் தலைமையில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் கையிருப்பில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை சேர்ந்த மக்களை தங்க வைத்திட தற்காலிக முகாம்கள் தவிர பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களது பகுதிகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய அவசர கால நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மழை தொடர்பான பாதிப்புகளை தெரிவிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க கூடிய சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண்ணாக 044-27921491 வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story