‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 6 Nov 2021 2:26 PM IST (Updated: 6 Nov 2021 2:26 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுமா?

சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனி 7-வது மெயின் ரோட்டில் குப்பைத்தொட்டி அருகே தேவையற்ற பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்திக்கு உகந்த இடமாகவும் உள்ளது.

- கே.தேவராஜன், அண்ணாநகர்.

அடிபம்பில் தண்ணீர் வருவது இல்லை

சென்னை வியசார்பாடி சத்தியமூர்த்தி நகர் 50-வது பிளாக்கில் உள்ள அடிபம்பு குடிநீர் குழாயில் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் வருவது இல்லை. இதனால் மக்கள் தண்ணீர் பிடிக்க சிரமம் அடைகின்றனர். எனவே இந்த குழாயில் உள்ள குளறுபடியை சரி செய்து, மீண்டும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

--முத்து கிருஷ்ணன், சத்தியமூர்த்திநகர்.

குண்டும், குழியுமான சாலை

சென்னை மதுரவாயல் பல்லவன் நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மிகவும் சிரமத்துக்கு இடையே வாகன ஓட்டிகள் செல்லும் நிலைமை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

- வாகன ஓட்டிகள்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீரேற்று நிலையம் கொட்டிஅம்மன் தெருவில் பொது கழிப்பிடம் அருகே மின் இணைப்பு பெட்டி உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வயர்கள் வெளியே தெரிகிறது. மழை காலம் என்பதால் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

- பொதுமக்கள், கீழ்ப்பாக்கம்.

பயணிகள் நிழற்குடையா? மதுபான கூடாரமா?

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சி வரதராஜபுரத்தில் ஆற்றுக்கு அருகே உள்ள பயணிகள் நிழற்கூடையை போதை ஆசாமிகள் மது அருந்தும் கூடாரம் போன்று பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயணிகள் அமரும் இருக்கை மேடைகளில் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. மேலும் திண்பண்ட கழிவுகளால் பயணிகள் நிழற்கூடை குப்பை கூளம் போன்று காணப்படுகிறது. எனவே பெண் பயணிகள் முகச்சுழிக்கும் நிலை இருக்கிறது.

- தீபன், அத்திமாஞ்சேரிப்பேட்டை

கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம், காட்டுப்பாக்கம் அருள்முருகன் நகரில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

-பொன்மொழி, காட்டுப்பாக்கம்

அகற்றப்படாத கழிவால் தெரு அசுத்தம் 



திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 12-வது வார்டு சி.கே மாணிக்கனார் தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர் வாரப்பட்டது. ஆனால் சாலையோரம் போடப்பட்ட அந்த கழிவுகள் இன்னும் சுத்தம் செய்யப்படாததால், தற்போது மழைநீருடன் அந்த கழிவுகள் சேர்ந்து மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது.

-பெல்லீஸ் மேத்யூ, செங்குன்றம்.

அங்கன்வாடி செல்ல குழந்தைகள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரியஓபுளாபுரம் ஊராட்சி நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. புதர்கள் மண்டியிருப்பதால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

-குருமணி, திருவள்ளூர் மாவட்டம்.

குப்பை தொட்டி வைக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவில் ரெயில் பாதை அருகே குப்பை தொட்டி இல்லாததால் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே இந்த போக்கை தவிர்க்க சாலையோரம் குப்பை தொட்டி வைத்து சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- ஜோன்ஸ், வண்டலூர்.

குரங்குகள் அட்டகாசம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தட்டாம்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.. இங்கு தினமும் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் கொய்யா மரங்களையும் வாழை மரங்களையும் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் வீட்டில் புகுந்து உணவுப் பொருள்களையும் நாசப்படுத்துகிறது. எனவே இப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

- வி.பிரபாகரன், சமூகஆர்வலர்.

கழிவுநீர் பிரச்சினையும்.., பன்றிகள் தொல்லையும்..,

காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் வெங்கடேச பாளையம் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இது போதாதென்று பன்றிகளின் தொல்லையும் உள்ளது. இதனால் சுகாதாரம் சீர்கெட்டு, மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. கொசுத்தொல்லையும் மிகுதியாக இருக்கிறது.

- பொதுமக்கள், சின்ன காஞ்சீபுரம்.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்கள் 



காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம்- உத்திரமேரூர் செல்லும் வழியில் ஓரிக்கை முதல் குருவிமலை இடையே உள்ள பாலாற்றின் மேலேயுள்ள பாலத்தில் உள்ள சாலையில் காங்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை இருக்கிறது. இந்த பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

- காலூர் ச.பாலேஷ், காஞ்சீபுரம் மாவட்டம்.

சுகாதார சீர்கேடு

காஞ்சீபுரம் மாவட்டம் அடுத்து மாங்காடு பேரூராட்சி பட்டூர் பகுதியில் தெற்குத் தெரு, மசூதி தெரு, வடக்கு தெரு ஆகிய இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடு பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. எனவே மாங்காடு பேரூராட்சி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

-முகமது இப்ராஹிம், பட்டூர்.

Next Story