முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 9-வது நாளாக கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 9-வது நாளாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
தேனி:
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. தொடர்ந்து நீர்மட்டத்தை உயர்த்த வேண்டாம் என கேரள அரசு வலியுறுத்தியது. இதற்கிடையே, இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணையில் வருகிற 11-ந்தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 139.50 அடியாக பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பு
ஆனால், நீர்மட்டம் 138.70 அடியாக இருந்த போதே கடந்த 29-ந்தேதி அணையில் இருந்து கேரள மந்திரிகள் ரோசி அகஸ்டின், ராஜன் ஆகியோர் முன்னிலையில் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. தமிழகத்தில் இந்த அணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மாவட்டங்களில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு முழுமையாக தண்ணீர் சென்று சேராத நிலையில் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வருகிற 11-ந்தேதி வரை 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள போதிலும், நீர்மட்டம் 139 அடியை கூட எட்டவிடாமல் தொடர்ந்து கேரளாவுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 9-வது நாளாக நேற்றும் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. இது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்து உள்ளது.
இடுக்கி அணை
நேற்று அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடியாக இருந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கன அடி தண்ணீரும், கேரளாவுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கேரளாவுக்கு செல்லும் தண்ணீர் மூலம் இடுக்கி அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ள போதிலும் அந்த அணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. எனவே, கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைத்து அணையின் நீர்மட்டத்தை 139.50 அடியாக தேக்கவும், வருகிற 11-ந்தேதிக்கு பிறகு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story