பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு


பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2021 7:35 PM IST (Updated: 6 Nov 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. ஆனால் தொடர் மழையால் அதனை பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். 

மகசூல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. மேலும் அரும்புகள் துளிர்விட்டு, பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. 

தொழிலாளர் பற்றாக்குறை

ஆனால் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோத்தகிரி பகுதியில நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்தால் பச்சை தேயிலை பறிக்க முடியாமல் கரட்டு இலையாக மாற வாய்ப்பு உள்ளது. 

நோய் தாக்குதல்

மேலும் போதுமான சூரிய வெளிச்சம் இல்லாததாலும், அடிக்கடி நிலவும் மேகமூட்டமான காலநிலை காரணமாகவும் செடிகளில் உள்ள கொழுந்துகளில் கொப்புள நோய் தாக்க தொடங்கி உள்ளது. இதனால் சிறு தேயிலை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story