அரசு சுற்றுலா மாளிகை ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது


அரசு சுற்றுலா மாளிகை ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 8:54 PM IST (Updated: 6 Nov 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஜே.ஜெகன் (வயது 52). இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வந்தார். மேலும் நடிகர் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 4-ந்தேதி தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மது அருந்த முயன்றார். அதை தடுத்த, அங்கு தற்காலிக ஊழியராக பணிபுரியும் சதாம் சேட் என்பவரை அவர் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சதாம் சேட் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஜெகன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜெகனை தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்நிலையில் தென்பாகம் போலீசார் ஜெகனை நேற்று கைது செய்தனர். மேலும், ஜெகனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Next Story