தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
வாறுகால் அடைப்பு சரிசெய்யப்பட்டது
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர், அங்குள்ள நடுத்தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார கேடு உருவாகி இருப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக வாறுகால் அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
மாடுகள் பிடித்துச் செல்லப்படுமா?
நெல்லை மேலப்பாளையம் முதல் தருவை வரை இரவு நேரத்தில் மாடுகள் சாலையை மறைத்து போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, ரோட்டில் இடையூறாக நிற்கும் மாடுகளை பிடித்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெருமாள், கோபாலசமுத்திரம்.
கம்பிவேலி அமைக்க வேண்டும்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொது நூலகத்தின் முன்பு மின்மாற்றி ஒன்று உள்ளது. அந்த மின்மாற்றியின் அருகே ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் வாகனங்கள் மின்மாற்றியில் இடித்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின்மாற்றியை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
சேதமடைந்த நூலக கட்டிடம்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்மன் கோவில் தெருவில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் உள்ளே ஒழுகுவதால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே பட்டங்கட்டியார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு செல்லும் வழியில், சாலையின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அதன் அருகில் இருக்கும் பொது குடிநீர் குழாய், தனிநபர் வீட்டு குழாய் உள்ளிட்டவற்றில் குடிநீர் மிக குறைவாக வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
தெரு விளக்கு எரியுமா?
தூத்துக்குடி மாநகராட்சி 35-வது வார்டு 3-வது மைல் புதுக்குடி 2-வது தெருவில் சிமெண்டு சாலை நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் புதிதாக எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டது. தற்போது அந்த மின்விளக்கு கடந்த 3 நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மருதபெருமாள், தூத்துக்குடி.
வழிகாட்டி பலகையில் தெரு பெயர் எழுதப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழிகாட்டி பலகைகளில் எந்த எழுத்தும் இல்லாமல், அதில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அனைத்தும் முழுமையாக அழிந்து விட்டது. இதனால் தெருக்களுக்கு என்ன பெயர்? என்று அப்பகுதி மக்களிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வெளியூரில் இருந்து வரும் மக்கள், தெருப்பெயர் தெரியாமல் திண்டாடுகின்றனர். அதனால் எந்த எழுத்தும் இல்லாமல் உள்ள வழிகாட்டி பலகைககளில் தெரு பெயர் எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், உடன்குடி.
மின்விளக்கு எரியவில்லை
தூத்துக்குடி மாநகராட்சி 16-வது வார்டு குரூஸ்புரம் அருகே மீன் மார்க்கெட்டை தாண்டி சிறிய சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள தெருவில் மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. எனவே, மின்விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆலன் ஜோசுவா, மேல அலங்காரத்தட்டு.
Related Tags :
Next Story