மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் 219 குளங்கள் நிரம்பின
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 219 குளங்கள் நிரம்பின.
புதுக்கோட்டை:
வட கிழக்கு பருவ மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை வெளுத்து வாங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வட கிழக்கு பருவ மழை பரவலாக பெய்ததோடு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பெய்த மழையில் மொத்தம் 2 ஆயிரத்து364.50 மில்லி மீட்டர் அளவு பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த 3-ந் தேதி ஒரே நாளில் 1,010.80 மில்லி மீட்டர் அளவு பதிவாகி இருந்தது. இந்த மழை கீரனூர், மழையூர், பெருங்களூர், கறம்பக்குடி, புதுக்கோட்டை, அன்னவாசல், விராலிமலை, திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பலமாக பெய்துள்ளது. இதேபோல கடற்கரையோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்திருந்தது.
219 குளங்கள் நிரம்பின
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. அக்னி ஆறு, வெள்ளாறு, காட்டாறுகளில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதுவரை மணற்பரப்பாக காட்சியளித்த ஆறுகளில் தண்ணீர் ஓடத்தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி மறுகரை பாய்ந்தோடுகிறது. மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு, அக்னியாறு கோட்டம், கல்லணை கால்வாய் கோட்டம், பேரூராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் 219 குளங்கள் முழு கொள்ளளவில் 100 சதவீதம் நிரம்பின. 1,255 குளங்கள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 1,391 குளங்கள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 1,805 குளங்களும், 25 சதவீதம வரை 412 குளங்களும் நிரம்பி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி நீர் மட்டம் உயர்வு
இதற்கிடையில் மழையின் காரணமாக மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதேபோல விவசாய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பணைகள் நிரம்பின
கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மீதமுள்ள 29 ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழை காலங்களில் ஏரி, குளங்கள் நிரம்புவதன் மூலமும், ஆழ்குழாய் பாசனத்தின் வாயிலாகவும் மட்டுமே இந்த பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இத்தாலுகாவில் 40 பெரிய பாசன குளங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி பகுதியில் பெய்த கனமழையால் மழையூர், வெள்ளாள விடுதி பகுதி அக்னி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் புலவன்காடு, மானியவயல், திருமணஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின.
குளங்கள் நிரம்பின
இந்த தடுப்பணைகளிலிருந்து கால்வாய்மூலம் தண்ணீர் செல்லும் கறம்பக்குடி குமரகுளம், மானியவயல் குளம், அதிரான்விடுதி தெற்கு பெரமிகுளம், வெள்ளாள விடுதி வடக்கு சாரணி குளம், தெற்கு சாரணி குளம், தென்னங்குடி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இருப்பினும் துவார் பெரிய ஏரி, கறம்பக்குடி பெரியகுளம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் வரத்துவாரிகள் சீரமைக்க படாததால் குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் அக்னி ஆற்று நீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசன குளங்களின் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story