வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரம்,
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக ஆந்திரா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான மரக்காணம், நடுக்குப்பம், கூனிமேடு, அனிச்சங்குப்பம், எக்கியார்குப்பம், அனுமந்தை, தந்திராயன்குப்பம், பெரியமுதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி, வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் சாரல் மழையாக தூறிக்கொண்டிருந்த நிலையில் மாலை வேளையில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
இந்த மழையின் காரணமாக நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக வந்து கரையை தொட்டுவிட்டு சென்றதை காண முடிந்தது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றியுள்ள 19 மீனவ கிராமங்களில் நேற்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் மீனவர்கள் அனைவரும் தங்கள் படகுகளை
கடற்கரையோரங்களின் மேடான பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். சிலர், கடலில் இருந்து படகுகளை டிராக்டர் மூலம் 100 அடி தூரம் இழுத்துச்சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்ததை காண முடிந்தது.
அதுபோல் மீன்பிடிப்பதற்கான வலைகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கடல் சீற்றத்துடன் காணப்பட்டதை அறிந்ததும் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story