எட்டயபுரம் பகுதியில் தொடர் மழையால் அழுகும் நிலையில் பயிர்கள்


எட்டயபுரம் பகுதியில் தொடர் மழையால் அழுகும் நிலையில் பயிர்கள்
x
தினத்தந்தி 6 Nov 2021 10:25 PM IST (Updated: 6 Nov 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர், எட்டயபுரம் பகுதிகளில் இந்த ஆண்டு மானவாரி நிலங்களில் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆரம்பத்தில் மழை பொய்த்து போன காரணத்தினால் 2 முறை விதைப்பு செய்து பயிர்கள் கருகிப்போனது. மீண்டும் 3-வது முறையாக விவசாயிகள் பருவமழையை நம்பி, விதைக்க தொடங்கினர். 

இடையில் பரவலாக பெய்த மழையின் காரணமாக பயிர்கள் முளைத்து வளர தொடங்கியது. சுமார் 1 அடிக்கு மேல் வளர்ந்த பயிர்களுக்கு விவசாயிகள் களையெடுப்பு பணிகளை செய்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக பெய்து வரும் மழையால், எட்டயபுரம், சூரன்குடி, நாகலாபுரம், அயன்வடமலாபுரம், புதூர் பகுதிகளில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. சுமார் 1,000 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு 3 முறை விதைப்பு செய்த போதிலும் 2 முறை மழையில்லாமலும், ஒரு முறை மழையின் காரணமாகவும் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்ேதாம். அந்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாமல் பெரிதும் நஷ்டம் அடைந்து உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இருக்கன்குடி அணைக்கட்டு கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே விளைநிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கும். இல்லையென்றால் ஆண்டுதோறும் இதே பிரச்சினை தான் ஏற்படும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

Next Story