அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்


அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Nov 2021 10:48 PM IST (Updated: 6 Nov 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

மழைவெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில், பொதுப்பணித்துறையினர் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான முறையில் நீரை வெளியேற்ற வேண்டும்.
மேலும் வெள்ளப் பாதிப்பினால் சாலைகள் சேதமடைந்து விட்டால், நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுபாதை அமைக்கவோ அல்லது பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சாலையை சீரமைக்கவோ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தங்கள் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லூர் பகுதியில் பெருமாள் ஏரியில் இருந்து மழைநீர் வெளியேறுவதையும், மேலும் பெருமாள் ஏரியில் இருந்து கீழ்பூவானிக்குப்பம் மதகு மூலம் நீர் வெளியேற்றப்படுவதையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் மற்றும் உதவிபொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story